நிகழ்ச்சி விவரம்
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 24.08.2024 மற்றும் 25.8.2024 தேதிகளில் ஆறுபடைவீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் நடைபெறவுள்ளது. இதில் உலகளாவிய சமய சான்றோர்கள், முக்கிய பிரமுகர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
இவ்விழாவில் பல்வேறு அரங்குகள் அமைகின்றன. குறிப்பாக, விழாவில் கலைநிகழ் அரங்கம், ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்க ஆய்வரங்கம், கந்தன் புகழ் பேசும் கண்காட்சி, மக்கள் அனைவரும் தாமே வழிபடும் வகையில் வேல்கோட்டம் மற்றும் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் மாநாடு பந்தல் அமைக்கப்பட உள்ளது.
இம்மாநாட்டில் முருகனடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமயச் சொற்பொழிவாளர், திருப்பணி மேற்கொண்டவர்கள், திருக்கோயிலுக்குத் தொண்டு புரிந்தோர், ஆன்மிக இலக்கிய படைப்பாளிகள் ஆகிய பல்வேறு வகைகளில் சிறந்து விளங்கும் பெருமக்களுக்கு, முருக வழிபாட்டுச் சான்றோர் திருப்பெயரில் விருதுகள் வழங்கப்பெறும்.
ஆய்வரங்கத்தில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்குத் தனியே விருதும் வழங்கப்பட உள்ளது. இதன் விவரங்கள் விரிவாகப் பின்வரும் நாட்களில் வெளியாகும். முதலில் ஆய்வுக்கட்டுரைகள் அளிக்க உள்ளவர்களுக்குரிய குறிப்புகளை இத்துடன் வழங்கி உள்ளோம்.