அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோயில் வரலாறு
பழனி என்னும் இத்திருத்தலம் சங்க காலத்தில் ‘பொதினி’ என்றும் ‘பழனம்’ என்றும் வழங்கப் பெற்றுள்ளது. திருமுருகாற்றுப்படையில் ‘திருவாவினன்குடி’ எனவும், அகநானூற்றில், ‘முழவுறழ்’ திணிதோணெடு வேளாவி, பொன்னுடை நெடுநகர்ப்பொதினி‘ (61), ‘முருகனற்போர் நெடு வேளாவி, யறுகோட்டி யானைப் பொதினி யாங்கண்‘ (1) எனவும் வருகின்ற குறிப்புகள் நோக்கத்தக்கனவாகும். சிலப்பதிகாரத்தில் வேளாவிக்கோ மாளிகை காட்டி (சிலம்பு 28-198) எனவும் இத்தலம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
பழனி முருகனைத் தேவாதிதேவர்களும், முனிவர்களும், கருட வாகனத்தில் திருமாலும், இடப வாகனத்தில் உமையும் சிவனும், ஐராவதத்தில் இந்திரனும் இந்திராணியும் வந்து குழுமித் தரிசித்த வண்ணமாக இருக்கிறார்கள் என்று நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் சிறப்பித்துக் கூறியுள்ளார்.
சிவகிரி, சக்திகிரி எனக் கயிலாயத்தில் இருந்தனவற்றைச் சிவபெருமான் அகத்திய முனிவருக்குக் கொடுக்கும் பொருட்டு அவற்றைப் பொதிகைக்குக் கொண்டு போக இடும்பாசுரனிடம் ஆணையிட, அவற்றைக் கொண்டுபோகும் வழியில் களைப்படைந்து இப்பொழுது பழனி மலையில் இருக்கும் இடத்தில் இடும்பன் இறக்கி வைக்க, அங்கு முருகன் கருணையால் அவ்விடத்திலேயே அம்மலைகள் பொருந்தின. சிவகிரியின் மீது முருகன் சிறுவனாகக் குராமரத்தின் கீழ்த்தோன்றவும், இடும்பனுக்கும் இளஞ்சேயோனாகிய முருகனுக்கும் போர் நிகழ்ந்தது. இடும்பன் உயிர் இழந்தான். இடும்பன் மனைவி முறையீடு செய்ததால், இடும்பன் மீண்டும் உயிர் பெற்றான். அப்போது இரு வரம் அருள வேண்டினான். இதில் பழனியாண்டவன் மலையில் இடும்பன் தான் காவலனாக இருக்கவும், தான் இருமலைகளையும் எடுத்து வந்தது போன்று காவடியுடன் வரும் அடியார்களுக்கு முருகன் அருள் தரவேண்டும் என்றும், இடும்பன் இருவரங்களைப் பெற்றுக் கொண்டான். இச்செய்தியைப் பழனி தலபுராணம் கூறுகிறது.
பழனிமலை அடிவாரத்தில் ஊருக்குள் அமைந்துள்ள திருவாவினன்குடி என்னும் திருக்கோயிலே ஆதிகோயிலாக இருந்துள்ளது. இதனையே நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் படைவீடாகப் பாடியுள்ளார். இம்மலைப் பகுதியை ஆவியர் குடி மரபினர் ஆதிகாலத்தில் சேரன் குலத்தில் உதித்த கடையெழு வள்ளல்களில் ஒருவனான பேகன் ஆண்டு வந்தான். ஆவியர்குடி மரபினர் ஆண்டு வந்ததால், ஆவினன்குடி என்னும் பெயர் பெற்றது.
உமாதேவியும் சிவபிரானும் இளம் குழந்தையாகிய முருகனை ‘ஞானப்பழம் நீ‘ என அன்போடு அழைத்தமை காரணமாக முருகன் வீற்றிருக்கும் இக்குன்றும் இத்தலமும் ‘பழம் நீ‘ என வழங்கப் பெற்றுப் பின்னர் அச்சொல் மருவி ‘பழனி‘ என வந்ததாக பக்தி உலகில் பேசப்படுகிறது.f
மலையின் சிறப்பு
பழனி மலை நிலப்பரப்புக்கு மேல் 450 அடி உயரமுடையது. கோயிலுக்கு ஏறிச் செல்லும் படிகள் 697 ஆகும். பழனி மலையைச் சுற்றி மூன்று கி.மீ. தூரமுள்ள மலைப்பிரகாரம் உள்ளது. இதன் இரு மருங்கிலும் அழகிய கடம்பு முதலிய மரங்கள் செழித்தோங்கி உள்ளன. நான்கு புறங்களிலும் நான்கு மயில் மண்டபங்களும் உள்ளன. மலைக்கோயிலுக்குச் செல்ல, படிக்கட்டுப்பாதை, யானைசெல்லும் யானைப் படிப்பாதை, இழுவை இரயில் பாதை மற்றும் கம்பிவட ஊர்தி என நான்கு பாதைகள் உள்ளன. மலையடிவாரத்திலுள்ள ‘பாத விநாயகர்‘ கோயிலை வலம் வந்து மலைவீதி சுற்றிப் பின்னர் மலை ஏறுவது வழக்கமாக உள்ளது.
இக்கோயில் எழுந்த காலத்தில், பழனிமலை ‘போகர்‘ என்னும் சித்தருக்குரிய உறைவிடமாகவும் அவருடைய சித்துக்களால் பெரும் நன்மையடையும் இடமாகவும் விளங்கியுள்ளது.