
முத்தமிழ் முருகன் மாநாட்டின் நோக்கம்
உலக நாடுகளில் திருமுருக வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மொரீசியஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, கனடா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் தனித்துவம் பெற்ற வழிபாடாகச் சிறந்து விளங்குகிறது. ஆகவே, உலக முருக பக்தர்களையும் சிந்தனையாளர்களையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
முருகப்பெருமானை நக்கீரர், குமரகுருபரர், அருணகிரிநாதர் தொடங்கி வாரியார் வரை போற்றிய அருளாளர் பலர் உண்டு. முருகனைப் பற்றிய பலதிற கொள்கைகள், கதைகள், கட்டுகள் நாட்டில் உலவுகின்றன. முதன்முதலில் முருகனின் மேன்மை கண்ட பழந்தமிழர், இளமையும் அழகும் உடைய செம்பொருளாகக் கொண்டு வழிபட்ட மாண்பை ஆய்வு நோக்கில் நிறுவ முருக பக்தர்களை உலகளவில் ஒருங்கிணைத்து அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – 2024 பழனியில் 24.08.2024 மற்றும் 25.8.2024 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
மாநாட்டின் குறிக்கோள்கள்
- முருக வழிபாட்டின் உள்ளுறை நெறிகளை உலகெங்கிலும் பரப்புதல்.
- முருகனை அடைவிக்கும் தத்துவக் கோட்பாடுகளை யாவரும் எளிமையாக அறிந்து அருளேற்றம் பெற உதவுதல் .
- மேன்மை பொலியும் முருகனடியார்களை உலகளாவிய அளவில் ஒருங்கிணைத்தல்.
- முருக வழிபாட்டு நெறியை புராணங்கள், இலக்கியங்கள், திருமுறைகள், திருப்புகழ், சைவ சித்தாந்த சாத்திரங்கள் ஆகியவற்றில் இருந்து ஆழ்ந்தெடுத்து அதன் முத்துக்களை உலகறிய பரப்புதல்.
அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருகக் கோட்பாடுகளை இளைஞர்கள் மனத்தில் பதித்து வைத்து உலகை உயர்த்த வழி வகுத்தல்.
மாநாடு நடைபெறும் பழனி திருத்தலத்தின் சிறப்புகள் :
- மாநாடு நடைபெறும் மேன்மைத்தலம் பழனி, இதன் சிறப்புகளில் சிந்தனைக்குரிய சில:
- முத்தமிழ்க் கடவுள் என்னும் முருகப் பெருமானின் மூன்றாவது படை வீடு திருவாவினன்குடி.
- முருகனைக் கனவிலும் நனவிலும் கண்டு “அதிசயம் அநேகம் உற்ற பழனி மலை” என்று ஏத்துவதுடன் மிக அதிகமான பாடல்களைப் பழனிக்கு அருளியுள்ளார் அருணகிரிநாதர்.
- நாடோறும் அருவமாக இருமுறை அருந்தமிழால் அகத்தியர் வழிபடுவதாகவும் அருளுகிறார் அருணகிரிநாதர்.
- ‘தமிழில் பாடல் கேட்டருள் பெருமாளே’ என்கிறது பழனித் திருப்புகழ்.
- ஏகராகிய முருகப்பெருமானை போகர் கோயில் கட்டி தமிழில் வழிபட்ட இடம் பழனி மலை. அங்கு அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ளது மிகமிகப் பொருத்தம்!